அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை – நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும் அபாயம் – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை
தற்போதைய அரசாங்கத்திடம் தெளிவான பொருளாதாரத் திட்டமொன்று இல்லாததால், நாடு விரைவில் மீண்டும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
மதுகம பகுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோது,
“அரசியலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் சிப்பாயைப் போல் இழுக்கப்படுவார்கள் என விவாதிப்பது இப்போது நேரத்தை வீணாக்குவது மட்டுமே. நாட்டை காப்பாற்ற விரும்பினால், அதை பொருளாதாரத்தின் வழியே மட்டுமே செய்ய முடியும். ஊழல் கட்டுப்பாடு, வளர்ச்சி ஆகியவை முக்கியமானவைதான், ஆனால் அதற்கு அடிப்படையானது பொருளாதாரம்,” என அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க வேண்டிய அவசியத்தை புரிந்துகொள்வதில்லை என்றும், அதற்கான திட்டமோ, நடவடிக்கையோ எதுவும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“அவ்வாறு திட்டமின்றி செயல்பட்டால், ஆகஸ்ட் இறுதிக்குள் இந்த பொருளாதார நெருக்கடி மிகவும் கடினமான கட்டத்திற்கு நகரும். ஆண்டு இறுதிக்குள் அது தீவிரமாவதும் உறுதி. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், முழு நாடும் மிகப் பெரிய நெருக்கடிக்குள்ளாகும்,” என ராஜித சேனாரத்ன எச்சரித்தார்.
இதனை தவிர்க்க, அரசாங்கம் உடனடியாக அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, நியாயமான மற்றும் செயல்திறன் கொண்ட பொருளாதாரத் திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும், திவாலான நிலைமையிலிருந்து மீள்வது எளிதல்ல என்பது அரசாங்கம் உணர வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ரணில் விக்ரமசிங்க இரண்டரை ஆண்டுகளில் நாட்டை ஒரு வகையில் மீட்டெடுத்தார். ஆனால் மக்கள் அதற்கான மதிப்பை இப்போது உணரவில்லை. அதை மீண்டும் இழந்துவிடும் அபாயம் மிக அருகிலுள்ளது,” என அவர் கூறினார்.