ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை வரைவு குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரை தெளிவுபடுத்தும் மூன்று நாள் நிகழ்ச்சி நேற்று (03) அலரி மாளிகையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி.பி. சபுதந்திரி, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல். முகம்மது நவவி மற்றும் ஜனாதிபதி செயலக சட்டப் பணிப்பாளர் நாயகம் சிரேஸ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை வரைவு, தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய மற்றும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஜீ.டபிள்யூ.ஏ. ரொஹான் பெர்னாண்டோ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளதோடு இதற்காக பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் வளவாளர்களாக பங்களித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை வரைவு குறித்து கலந்துகொண்டோருக்கு தெளிவுபடுத்தினார்.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப, இலங்கையை வளமான அறிவு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி இட்டுச் செல்ல தேவையான தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை கட்டமைப்பைத் தயாரிப்பதில் தொடர்புடைய தரப்பினர்களின் பங்களிப்பைப் பெறுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை அதன் நடைமுறைச் செயலாக்கத்தில் தேசியத் தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்காக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் உள்ள நிபுணர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் கோரப்பட்டன. அதன்படி, அந்தத் துறை தொடர்பான தற்போதைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான மையப்படுத்தப்பட்ட பொறிமுறையைத் தயாரிப்பதற்கான ஒரு எதிர்காலக் கொள்கையை வகுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய உரையை நிகழ்த்திய பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைக்கு முன்னுரிமையையும் மதிப்பையும் வழங்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை தற்போது இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
பொருளாதார முன்னேற்றம், சமூக நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவை இந்த தேசியக் கொள்கையை வகுப்பதன் முக்கிய நோக்கங்கள் என்று கூறிய அவர், ஐ.நா. அறிக்கைகளின்படி, இலங்கையின் மனித மூலதனத்தில் 60% மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், நாட்டில் மிக உயர்ந்த அளவிலான அறிவுத் திறன் கொண்ட மக்களின் திறனை முறையாகப் பயன்படுத்த இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.
உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மொத்தத் தேசிய உற்பத்தியில் 3% – 5% வரை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைக்கு ஒதுக்குவதுடன், இலங்கை போன்ற நாடுகள் இதுவரை இந்தத் துறைக்கு மிகக் குறைந்த சதவீதத்தையே ஒதுக்கியுள்ளன என்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அந்த நிலைமை மாறியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்று கூறிய உடுகமசூரிய, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் முதலீடு செய்தல், புத்தாக்கத் துறையின் முன்னேற்றத்திற்கும் உயர் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கும் மிகவும் அவசியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் ஜீ.டபிள்யூ.ஏ. ரொஹான் பெர்னாண்டோ, நிகழ்ச்சியின் ஆரம்ப உரையில், இந்த தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை வரைவு மூலம் ஆராய்ச்சிக்கான சட்டக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச தரங்களின் நெறிமுறை கட்டமைப்பு ஆகியவை முன்மொழியப்பட்டதாக தெரிவித்தார்.
இது இந்தியா, சீனா, மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைகளுக்கு இணையாக இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார். அதன்படி, இந்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களுக்கு உகந்த சூழலை உருவாக்குதல், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புத்தாக்கத்தில் ஈடுபடுவோரை ஊக்குவித்தல், தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, அவற்றை மையமாகக் கொண்ட புத்தாக்க மற்றும் ஆராய்ச்சிக்கான பரந்த தளத்தை உருவாக்குதல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு போதுமான நிதி ஆதாரங்களை ஒதுக்குதல் மற்றும் முறையான வணிகமயமாக்கலை உறுதி செய்தல் போன்ற 10 நோக்கங்களின் அடிப்படையில் இந்த தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை வரைவு செய்யப்பட்டுள்ளது. நியாயத்தன்மையை ஊக்குவித்தல், பயனுள்ள நிர்வாகம், நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை நிறுவுதல், பன்முகத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்றுக்கொள்வது போன்ற 07 கொள்கைகளுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், இக்கொள்கையை உருவாக்கும் போது ஆண்- பெண் சமூகத்தன்மை ஆகிய விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளமை சிறப்பம்சம் ஆகும்.
இந்த திட்டம் அரசு, தனியார் துறை, பொது மக்கள் மற்றும் சர்வதேச தரப்பினர்கள் ஆகிய நான்கு துறைகளுக்கு இடையிலான கூட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. மேலும், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், விஞ்ஞானம் மற்றும் கல்வி, தொழில்நுட்பத் துறைகள், இயற்கை வளங்கள், பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு, கலை மற்றும் மனித மேம்பாடு போன்ற 07 முக்கிய கருப்பொருள்களின் கீழ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் நிறைவு உரையை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல். மொஹமட் நவவி நிகழ்த்தியதுடன், இந்த திட்டத்தை தனித்தனியாக செயல்படுத்தாமல், கூட்டாகவும், ஒரு குழுவாகவும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், அனைத்து தரப்பினருக்கும் அதற்காக அழைக்கப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
மூன்று நாட்களிலும் பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை இடம்பெற்ற தெளிவுபடுத்தல் அமர்வின் முடிவில் தரப்பினர்களுக்கு தமது ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், பேராசிரியர் கோமிக உடுகமசூரிய உள்ளிட்ட நிபுணர்கள் குழு பதில்களையும் தெளிவுபடுத்தல்களையும் வழங்கியது.