சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent) மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி தெரிவித்தார்.
அதனால் மாணவர்களாக, ஆசிரியர்களினதும் பெற்றோரினதும் அறிவுரைகளை மனதுக்கு எடுத்து, ஒரு நாளில் பெருமைப்படக்கூடிய ஒரு மரபை விட்டுச் செல்லும் வகையில் வாழ வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளாக இருக்க பாடுபட வேண்டும் என்று அவர் ஊக்குவித்ததுடன், தேர்தல் இலாபங்களை மாத்திரம் கவனம் செலுத்தும் பாரம்பரிய அரசியல்வாதிகளாக மாறுவதற்குப் பதிலாக, எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் நெறிமுறைகளைக் கொண்ட தலைவர்களாக மாறுவதை மாணவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் 2025.05.04 ஆம் திகதி இடம்பெற்ற கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வில் உரையாற்றும் போதே பிரதி சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.