இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் என்பவற்றின் நடவடிக்கைகள்’ குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வொன்று 2025 ஜூலை 11 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி தலைமைதாங்கினார். பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான ஜயலத் பெரேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
1936ஆம் ஆண்டு முதல் இலங்கையில் அளப்பெரிய சேவையாற்றிவரும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் இக்கட்டான சூழ்நிலைகளில் நாட்டுக்குத் தோள்கொடுத்து உதவியிருப்பதாக இங்கு உரையாற்றிய பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி குறிப்பிட்டார்.
மலேரியா ஒழிப்பு, சுனாமிப் பேரலைத் தாக்கம், உள்நாட்டு யுத்தம் எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆற்றிய உதவிகளை என்றும் மறக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் பல்வேறு விழிப்புணர்வூட்டும் திட்டங்களுக்கும், இரத்ததான முகாம்கள் போன்ற விடயங்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தனது அர்ப்பணிப்பான பங்களிப்பை வழங்கிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அது மாத்திரமன்றி, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் என்பவற்றின் உறுப்பினர்கள் தமது உயிர்களைப் பணயம் வைத்து யுத்தம் இடம்பெற்றுவரும் பகுதிகளில் மக்களுக்கு ஆற்றிவரும் ஒத்துழைப்புக்கும் பிரதிச் சபாநாயகர் பாராட்டைத் தெரிவித்தார்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தோற்றம், இலங்கையில் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் மற்றும் ICRC, IFRC போன்றவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் மற்றும் அவற்றினால் முன்னெடுக்கப்படும் சேவைகள் குறித்து அவற்றின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவான விளக்கத்தை வழங்கினர்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பில் எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வலியுறுத்தினர்.