தமது நிறுவனம் வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் கட்டுப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை வௌியிட்டுள்ளது.
அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்கள், மாகாண மற்றும் பிரதான செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள், கூட்டுத்தாபன பிரதானிகள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளுக்கு இதனை நினைவூட்டும் வகையில் உத்தியோகபூர்வ தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் பிரிவு 15(7) இன் படி, மனித உரிமைகள் ஆணைக்குழு தங்களுக்கு அனுப்பப்பட்ட பரிந்துரைகளை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு நிறுவனங்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க வேண்டிய காலக்கெடுவை நிர்ணயிக்க அதிகாரம் உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அனைத்து அரசு நிறுவனங்களையும் அதிகாரிகளையும் தங்கள் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்கவும், ஆணைக்குழுவின் ஆணையை மதிக்கவும், இலங்கையில் உள்ள அனைத்து நபர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் செயல்படுமாறு வலியுறுத்துகிறது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறியது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.