சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று(16) கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் ஆரம்பமானது.
“பன்முகத்தன்மையும் வாய்ப்புகளும் நிறைந்த பிராந்தியத்தின் வழியாக சூரிய சக்தி ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லுதல்” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இணைத் தலைமைத்துவத்தை இலங்கை வகித்தது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், பிராந்திய சூரிய சக்தி ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கும், நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை வலியுறுத்தினார்.
இலங்கைக்கும் ISA பிராந்தியக் குழுவிற்கும் இடையிலான உள்ளூர் பங்களிப்பைக் குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வ வரைபடத் திட்டம் கையெழுத்திடப்பட்டு வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, சூரிய சக்தி பயன்பாட்டை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் “சூரிய சக்திக்கான போராட்டம்” எனும் திட்டம் மற்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கை அடையும் நோக்கத்துடன் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இந்த மாநாடு புதிய பிராந்தியப் பங்காளிகளை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமைந்ததுடன், மொரட்டுவ பல்கலைக்கழகமானது, சூரிய வலுசக்தி புத்தகத்திற்கான பிரதான அறிவுசார் ஆராய்ச்சி மையமாக அடையாளம் காணப்பட்டது.
சூரிய சக்தி தொழில்நுட்பத்தின் மூலம் பிராந்திய அபிவிருத்தி மற்றும் பல்வகை சமூக-பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் உள்ளிட்ட விசேட சூரிய சக்தி தாக்க புத்தாக்கக் கண்காட்சியின் ஆரம்ப விழாவிலும் பிரதமர் கலந்துகொண்டார்.