அருகம் விரிகுடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்ததற்காக தாய்லாந்து சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாலினத்திற்கான சட்ட விளக்கம் இலங்கையில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
இது தொடர்பில் சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உட்பட பலர் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அருகம் விரிகுடா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே மேலாடையின்றி நடந்ததற்காக 26 வயதான தாய்லாந்து நாட்டவருக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இருப்பினும், ஆரம்பத்தில் ஒரு பெண் என்று அடையாளம் காணப்பட்ட சுற்றுலாப் பயணியின் கடவுச்சீட்டில் அவரது பாலினம் “M” (ஆண்) எனக் காட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இது இலங்கை சட்டத்தில் பாலினத்தின் விளக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
பத்திரிகையாளர் ரங்க ஸ்ரீலால் தனது x தளத்தில் இந்த சட்ட தெளிவின்மையை சுட்டிக்காட்டியுள்ளார்.
பொத்துவில் நீதவான் ஏ.எல்.எம். ஹில்மியின் தீர்ப்பு இலங்கையில் ஆண்கள் “அநாகரீகமான வெளிப்பாடு” காரணமாக குற்றவாளிகளாகக் கருதப்படக்கூடாது என்பதற்கான சட்ட முன்னுதாரணத்தை அமைத்துள்ளது என்று அவர் கூறினார்.
இலங்கை சட்டம் தற்போது ஆண்-பெண் இருமைக்கு அப்பாற்பட்ட பாலின அடையாளங்களை அங்கீகரிக்கவில்லை, மேலும் ஆண்கள் பொது இடங்களில் சட்டையின்றி செல்வதை குற்றவாளியாக்குவதில்லை.
இந்தத் தீர்ப்பு, வெளிநாட்டினர், குறிப்பாக திருநங்கைகள் சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகளில் பாலினம் எவ்வாறு விளக்கப்படுகிறது என்பது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் அந்த ஆணுக்கும் அவரது துணைக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறின் விளைவாகும் என்று பொலிசார் முன்பு கூறியிருந்தனர். தாய்லாந்து நாட்டவருக்கு அநாகரீகமான வெளிப்பாட்டிற்காக இரண்டு வார சிறைத்தண்டனையும், பொது இடையூறு விளைவித்ததற்காக ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது, தண்டனைகள் ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் இலங்கையின் தற்போதைய சட்ட அமைப்பிற்குள் பாலியல் மற்றும் பாலின அடையாளங்களை வரையறுக்க வேண்டியதன் அவசியம் குறித்த பரந்த உரையாடலைத் தூண்டுகிறது.