ஓர் ஆசிரியையாகவும், அர்ப்பணிப்புள்ள சமூக சேவையாளராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பங்களித்து வரும் ரோஹிணி விஜேரத்னவின் மீதான தொடர்ந்து வரும் இழிவான விமர்சனங்களை கண்டித்து, அவற்றை உடனடியாக நிறுத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய அவர், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது வார்த்தைகளில் மட்டுமல்ல, நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டிய கடமையாகும் எனத் தெரிவித்துள்ளார். ரோஹிணி விஜேரத்னவின் நற்பெயரை தகர்க்கும் வகையில் சில உறுப்பினர்கள் இலக்காக வைத்து செயற்படுவது வருத்தத்திற்குரியதெனவும், இது அவரது சமூக சேவையை தடுக்க முயலும் ஒரு செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டினார்.
ரோஹிணி விஜேரத்னவின் தந்தை, விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தை தனிநபர் பிரேரணை மூலம் கொண்டு வந்த பெருமை வாய்ந்த ஒருவர் என்பதை நினைவுகூறிய அவர், அவரின் மகளும், நாட்டுக்காக பணியாற்றும் அர்ப்பணிப்பான ஒருவராக திகழ்கிறார் என வலியுறுத்தினார்.
இத்தகைய சூழலில், ரோஹிணியின் பாதுகாப்பு தொடர்பாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசேட வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என்றும் சஜித் பிரேமதாசக் கூறினார்.