அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகாமையில், வங்காள விரிகுடாவில் இன்று (29) அதிகாலை 12:11 மணிக்கு 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.
இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கத்தின் மையம் கடலின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்திற்கு பின்னர் பல பின்னதிர்வுகள் (aftershocks) உணரப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரை உயிரிழப்புகள் அல்லது உடைமைகள் சேதமடைந்ததற்கான தகவல்கள் எந்தவொரு அதிகாரபூர்வ அமைப்புகளாலும் வெளியிடப்படவில்லை.
இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரகோன் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கம் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கையில் அதனுடைய தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பின்னதிர்வுகள் ஏற்பட்டிருந்தாலும், தேவையற்ற பதற்றத்திற்கு இடமின்றி மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் தீபானி வீரகோன் கேட்டுக்கொண்டார்.
தற்போது வரை எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை.