இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில், அதனைத் தடுக்க தாமே சரியான நேரத்தில் தலையிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் ஸ்காட்லாந்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ட்ரம்ப், சமீபத்தில் உலகம் முழுவதும் நிகழக்கூடிய ஆறு முக்கிய போர்களை தாமே தடுத்ததாகக் கூறினார்.
“நான் இல்லையென்றால், ஆறு பெரிய போர்கள் நடந்திருக்கும். அதில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் மிகக் கவலைக்கிடமானது. ஏனெனில் இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருப்பவை.
இதுபோன்ற சூழ்நிலையில் போர் வெடித்திருந்தால், அது அணு ஆயுத வீழ்ச்சி மற்றும் பேரழிவாக மாறியிருக்கும். இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களை நான் நன்கு அறிவேன். அவர்கள் போர் வழியைத் தேர்ந்தெடுத்திருந்தால், அதற்கான விளைவுகள் கடுமையாக இருந்திருக்கும்..” எனத் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட போர் சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு தாமாகவே எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களைத் தாமே தடுப்பதாக ட்ரம்ப் பலமுறை கூறியிருக்கிறார். இருப்பினும், இதனை இந்திய மத்திய அரசு மறுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.