ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (18) ஆரம்பமானதுடன் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் முன்வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 2022ஆம் ஆண்டின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனம் தொடர்பிலான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தினை ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்கள் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலர் விவாதத்தின் போது கருத்து தெரிவிக்க தயாராகவிருப்பதால் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமையையும் விவாதத்திற்காக ஒதுக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதன்போது பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கமைய சபாநாயகருக்கு எடுத்துரைத்து 21ஆம் திகதி வெள்ளிக்கிழமையையும் விவாதத்திற்காக ஒதுக்கிக் கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
‘எண்ணெய் தாங்கிகள் மீண்டும் நாட்டிற்கு’ எனும் தொனிப்பொருளில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான ஒப்பந்தம் குறித்து வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெளிவுபடுத்தினார்.