இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரான பாரத் அருள்சாமி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு இ.தொ.கா நன்றி தெரிவித்துள்ளதுடன், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இலங்கையை மீண்டெழ இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும், உதவியும் அதிகமாக தேவைப்படுகிறது.
அதேபோன்று இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக இந்த பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தியா அவர்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் என்பதுடன், இலங்கை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து விதத்திலும் இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இ.தொ.கா இந்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கைக்கு சாதகமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் இந்தியா முன்னெடுக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.