இனங்களுக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல ஐக்கிய நாடுகள் சபையின் பூரண ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்க தயாராகவுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா சபையின் தலைமையகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் காணாமற்போனோர் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரெஸிடம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான பலர், தாம் ஆட்சிக்கு வந்தமையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சிறு பொருளாதாரத்தை கொண்ட இலங்கை, கொவிட் தொற்றுக்கு மத்தியில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இதன்போது ஐநா செயலாளர் நாயகத்திடம் தௌிவுபடுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றுக்கு மத்தியில் இலங்கையில் கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அதிக அழுத்தங்கள் தொடர்பிலும் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, நவம்பர் மாத இறுதிக்கு முன்னர் 15 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசிகளை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.