நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பிணை

619

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள   திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்ட பின்னர் , அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்த யாழ்ப்பாண பொலிஸார் , அவர்களுக்கு எதிராக எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள  திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை  கைது செய்யும் நோக்குடன் இன்று வியாழக்கிழமை முதல்  பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்ற போது , அதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று வாக்கு மூலம் பெற்ற பின்னரே பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

அதேவேளை யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள்  திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க யாழ்ப்பாண பொலிஸார் இன்றைய தினம் நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here