சரத் வீரசேகரவின் குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

927

ஊடக அறிக்கை

கடந்த 2021 செப்டம்பர் 22ம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சரத் வீரசேகர அவர்கள் பாராளுமன்ற அமர்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களைப் பற்றி, அவர் தீவிரவாதத்தைப் பிரச்சாரம் செய்ததாகவும் இனங்களுக்கிடையில் குரோதத்தை வளர்த்ததாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள் காட்டி பேசியிருந்தார்.

இக்குற்றச்சாட்டுக்களை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி முற்றாக மறுக்கிறது.

ஆணைக்குழு அறிக்கை உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் பற்றி குறிப்பிடும் அத்தியாயத்தின் இறுதியில் இது ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களையும், ஆவணங்களையும் நிபுணர்களின் கருத்துக்களையும் அடிப்படையாக வைத்தே தயாரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஆணைக்குழு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பருக்கெதிராக தனது குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆவணத்தையும், குறைந்த பட்சம் அவர் எழுதிய ஒரு வசனத்தையேனும், ஆதாரமாகக் காட்டவில்லை. மாறாக இஸ்லாத்தையும் இறுதித்தூதர் முஹம்மத் நபியையும் தனது முகநூலில் இழிவுபடுத்தி எழுதிவரும் ஒரு இளைஞன் 25 வருடங்களுக்கு முன்னர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் கூறியதைத் தான் செவிமடுத்ததாக இட்டுக்கட்டி பொய்யாகக் கூறிய சாட்சியத்தை மட்டுமே ஆதாரமாகக் காட்டியுள்ளது.

இக்குற்றச்சாட்டுக்களை உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் முற்றாக மறுத்துள்ளதோடு ”எனக்கெதிரான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்” எனும் தலைப்பில் ஒரு கையேட் டையும் மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். இக்கையேடு ஜனாதிபதி, அமைச்சர்கள், சட்டமாஅதிபர் உட்பட பலருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பற்றி பல பிழையான தகவல்களை உள்ளடக்கியிருப்பதே அதன் தகவல் மூலங்கள் எவ்வளவு பலவீனமானவை என்பதற்குப் போதிய ஆதாரமாகும் என்பதை நாம் எமது முந்தைய அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளோம் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

இந்த நிலையில் இத்தகைய அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை மீண்டும் மீண்டும் மீட்டுவதும் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதும் நியாயமற்றதும் அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதுமாகும் என்றே நாம் கருதுகின்றோம்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
24.09.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here