நாட்டைப் பிரிக்க நான் தயாராக இல்லை

382

ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில், பாராளுமன்றத்திற்கூடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராலும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியுமெனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லையெனில், அதனை நடைமுறைப்படுத்த நேரிடும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதியரசர் குழாம் முன்வைத்துள்ள தீர்ப்புக்கமையவே செயற்படுகின்றேன். விசேடமாக பிரதம நீதியரசர் பாலிந்த ரணசிங்கவின் தீர்ப்பிற்கமையவே செயற்படுகிறேன்.

எமது மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட இல்லை. லண்டன் நகர சபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியாது. இதனை பெடரல் இராச்சியமாவதைத் தவிர்க்க, ஜே.ஆர் ஜயவர்தன அவர்கள் சட்டத்தரணிகளுடன் இணைந்து பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். இதுவரை நாட்டில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து ஜனாதிபதிகளும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவே தீர்மானித்தனர். இதனை இனிமேலும் நடைமுறைப்படுத்தவில்லையெனில், நாம் அதனை அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டும்.

இந்த நாட்டைப் பிரிக்க நான் தயாராக இல்லை. நாம் எவரும் தயாரில்லை. இலங்கையில் உள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் உட்பட ஏனைய குழுக்களுடன் சிங்களவர்கள் இணைந்து வாழ வேண்டும். நமது தேசிய கீதத்தில் “ஒரு தாயின் மக்கள்” என்பதை நாம் பாதுகாத்தால், நம் நாடு ஒற்றுமையுடன் முன்னேற முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை என்பவற்றை நாம் அனைவரும் இணங்கும் வகையில் படிப்படியாக தீர்த்துக் கொள்ள முடியும். இந்தப் பிரச்சினைகளில் தங்கிவிடாது, பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு முன்நோக்கிச் செல்வோம்.

நாம் யாரும் காட்டிக்கொடுக்கப் போவதில்லை. நாட்டைப் பிரிக்கப் போவதில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். இணைந்து பயணிப்போம்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here