நினைவு முத்திரை – நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

378

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (02) கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

நினைவு முத்திரையை வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவும் நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தனர்.

தபால் திணைக்களத்தின் பாரம்பரிய நடவடிக்கைகளுக்கு அமைவாக 50 ரூபா பெறுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நினைவு முத்திரை மற்றும் அதன் முதல் நாள் கடித உறை என்பன இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் உப தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும்.

75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டள்ள முத்திரை கண்காட்சி மற்றும் அருங்காட்சியக கண்காட்சி என்பன பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபா பெறுமதியுள்ள நினைவு நாணயம் புழக்கத்திற்கு விடப்பட மாட்டாது என்பதோடு, இது இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 71 வது நினைவு நாணயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here