மக்களின் அர்ப்பணிப்பிலேயே பொருளாதார வளர்ச்சியின் வேகம் தங்கியுள்ளது

245

நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம், மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

யுத்தத்திற்கு முன்னர் வடமாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த வலுவான பொருளாதாரத்தை வடக்கில் மீண்டும் ஏற்படுத்தத் தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

வடமாகாண பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நல்லிணக்க வேலைத்திட்டத்தின் கீழ், அதிகூடிய அதிகாரத்தை பகிர்வது குறித்தும் வடக்கு பிரதேசத்தின் அரசியல் விவகாரங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. பெப்ரவரி 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையிலும் உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளேன். இன்று நான் அதைப் பற்றி பேசப் போவதில்லை.

பொருளாதார அபிவிருத்தியுடன் வட மாகாணத்திலும் பாரிய அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என நான் நம்புகிறேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த மாகாணத்தில் புதிய பொருளாதார அபிவிருத்தியை உருவாக்குவதற்கான உங்கள் யோசனைகளை எமக்கு வழங்குங்கள். பயிற்செய்கையை ஆரம்பிப்பதற்காகவே உரம் வழங்குவதற்கு முன்னுரிமை அளித்தோம்.

இன்றைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதாயின் ஒரு திட்டத்திற்கு அமைய செயற்படவேண்டும். வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வேண்டும். மேலும், எதிர்காலத்திற்காக இந்த ஆண்டு முதல் வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட வேண்டும். அவற்றையும் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் அந்நியச் செலாவணி கையிருப்பு மேலதிகமாக இருக்க வேண்டும்.

எனவே, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் மற்றும் போட்டித்தன்மையுள்ள பொருளாதாரம் என்பவற்றை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக சில முக்கிய மாகாணங்கள் சிலவற்றை தெரிவு செய்துள்ளோம். அதில் ஒன்று வட மாகாணம். அந்த வேலைத்திட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த வடமாகாணத்தின் பொருளாதாரம் பாரியளவில் முன்னேறி பாரிய பொருளாதாரமாக மாறும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், மீன்பிடித் தொழிலை வணிக ரீதியாக இலாபகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். பாரம்பரிய மீன்பிடி தொழில் மட்டுமல்ல, இறால் வளர்ப்புக்கும் முன்னுரிமை அளித்துச் செயற்படலாம்.

இந்த மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. குளங்களில் சூரியக் கலங்களைப் பொருத்தி மின்சாரம் பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதோடு பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான சாத்தியம் குறித்தும் ஆராயப்படுகிறது .

மேலும், இந்த மாகாணத்தில் இருந்து போதைப்பொருளை ஒழிக்க வேண்டும். கீழ் மட்டத்தில் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து அனைவரும் இணைந்து ஆராய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here