CEB மற்றும் PUCSL இணைந்து கலந்துரையாடுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

251

மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 15 ஆம் திகதி இறுதித் தீர்மானம் எடுக்க முன்னர், ஆணைக்குழு மற்றும் மின்சார சபை இணைந்து கலந்துரையாடுமாறு தேசிய பேரவை உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ள இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் மின்சார சபை மற்றும் ஆணைக்குழு என்பன கூடிக் கலந்துரையாடுமாறு தேசிய பேரவை இன்று (13) உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

அதற்கமைய இன்று (13) பிற்பகல் கலந்துரையாடுவதற்கு இரு தரப்பு அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்தனர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் தேசிய பேரவை இன்று (13) கூடிய போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மின்சார சபை 60% கட்டண அதிகரிப்பு கோரியுள்ள பின்னணியில் தேவையான அளவு அதிகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை எனின் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சார சபையின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார். அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்குக் கூட நிதி இல்லாமல் போவதால் நீண்ட நேர மின் துண்டிப்புக்குச் செல்லவேண்டிய நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிப்பதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். மின்சார சபையின் தரவுகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்கள் இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த சந்தர்ப்பத்தில் மின்சார சபை மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பவற்றின் கருத்துக்களை கலந்துரையாடி ஒரு கருத்துக்கு வந்து தீர்மானம் எடுப்பது மிக முக்கியமானது என்றும், அவ்வாறில்லை எனின் பொதுமக்கள் கஷ்டத்துக்கு உட்படுவதை தவிர்க்க முடியாமல் போகும் என சுட்டிக்காட்டிய தேசிய பேரவை இது தொடர்பில் விரைவாகக் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதன் தேவையை வலியுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here