மத்திய ஆப்பிரிக்க நாடான ஈக்வடோரியல் கினியாவில் மார்பர்க் ( Marburg) என்னும் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மார்பர்க் வைரஸ் தொற்றுக்கு 9 பேர் உயிரிழந்திருப்பதை ஈக்வடோரியல் கினியா உறுதிப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அறியப்படாத இரத்தக்கசிவு காய்ச்சல் சிலருக்கு பரவியது கண்டறியப்பட்டதும், 200-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த தொற்று காரணமாக அண்டை நாடான கெமரூனும் எல்லைப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியது.
ஈக்வடோரியல் கினியாவில் காய்ச்சல், சோர்வு, இரத்தம் கலந்த வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளுடன் மார்பர்க் வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் 16 பேர் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.