தேர்தலில் மக்கள் புத்திசாலித்தனமாக முடிவை எடுக்குமாறு கோரிக்கை

276

ராஜபக்சர்களினால் வங்குரோத்தடையச் செய்யப்பட்ட எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமானால் பணமும், டொலர்களும், முதலீடுகளும் தேவைப்படுவதாகவும், இதை விடுத்து வேறு வழியில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வங்குரோத்தான நாட்டை மீட்க தீர்வு தருவோம் என நாடு முழுவதும் கூட்டங்கள் நடாத்தி, வீராப்பு பேசும் சிவப்பு சகோதரர்களுக்கு நாட்டை கட்டியெழுப்பத் தேவையான குறைந்தபட்ச வசதி ஏற்பாடுகளோ, தொடர்புகளோ இல்லை எனவும், சர்வதேச ஆதரவின்றி அவர்களால் எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை தன்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தம்பட்டம் அடிக்கும் ஒவ்வொரு கட்சியும் எதிர்க்கட்சியில் இருந்து மக்களுக்குச் செய்த சேவை தொடர்பில் மக்கள் தேடிப்பார்க்க வேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர், இதை தேடிப் பார்த்தால் மக்களுக்கு உண்மையில் யார் சேவை செய்கிறார்கள் என்பதை மக்களே புரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வங்குரோத்து நிலைக்குள்ளான நாட்டுக்குத் தீர்வுகளை வழங்குவதாகக் கூறும் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்கள கடந்துள்ள போதிலும், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு மக்களுக்காக செய்த பணிகள் குறித்து நோக்கும் போது எதுவும் இல்லை எனவும், எவ்வாறாயினும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி, கோவிட் காலத்திலும் அதற்குப் பின்னரும் நாட்டில் சுகாதாரம் மற்றும் கல்விக்காக கிட்டத்தட்ட 500 மில்லியன் ரூபா பெருமதியில் மூச்சு மற்றும் பிரபஞ்சம் வேலைத்திட்டங்கள் மூலம் நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.

எனவே மக்களுக்காக யார் உண்மையில் சேவை செய்கிறார்கள் என்பதை மக்களால் யதார்த்தமாகப் புரிந்துகொள்ள முடியும் எனவும், இந்தத் தேர்தலில் மக்கள் புத்திசாலித்தனமாக முடிவை எடுக்குமாறும் எதிர்க்கட்சித்தலைவர் கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here