மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரிக்க குழு நியமிப்பு

137

மத்திய கலாசார நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையின் ஊடாக புலப்பட்ட விடயங்கள் குறித்து விசாரிப்பதற்கும், கடந்த நவம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற கோப் குழுவில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்கும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு ரஞ்சித் பண்டார தலைமையில் கூடியது.

குறிப்பிட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் புலப்பட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டதாக கோப் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்ட உள்ளக விசாரணைக் குழு தொடர்பில் இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அத்துடன், மத்திய கலாசார நிதியத்தின் கட்டுப்பாட்டுச் சபைக் கூட்டத்தை நடத்துவது தொடர்பிலும், நிதியம் உரிய முறையில் செலவீனங்களை மேற்கொண்டுள்ளதா என்பது தொடர்பிலும் கடந்த கூட்டத்தில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டிருந்ததுடன், அதில் குறிப்பாக கட்டுப்பாட்டுச் சபை 209வது கூட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கும் குழு உறுப்பினர்கள் இணங்கினர்.

இதற்கமைய குறிப்பிட்ட 209வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு 11 உறுப்பினர்களில் 07 பேர் மாத்திரமே இணக்கப்பாட்டைத் தெரிவித்ததுடன், முன்னாள் பிரதமர் உட்பட 04 பேர் தமது கையொப்பத்தை இடவில்லையென்றும் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கூட்டத்தின் கையொப்பப் பட்டியலில் கையொப்பமிட்ட 07 பேரினது கையொப்பத்துக்கும், அதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் அந்த நபர்கள் இட்ட கையொப்பத்துக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுவது புலனாகியுள்ளது எனத் தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், குறிப்பிட்ட 209 கட்டுப்பாட்டுச் சபைக் கூட்டத்தின் தீர்மானங்கள் 210ஆவது கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லையெனவும் குறிப்பிட்டார்.

குறித்த கட்டுப்பாட்டுச் சபையில் அங்கம் வகித்த அப்போதைய பிரதமரின் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளரும் அவ்வாறான சந்திப்பில் தாம் பங்குபற்றவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாகவும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, விரிவான கலந்துரையாடலின் பின்னர் கோப் குழுவின் தலைவர், புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பின்வரும் பரிந்துரைகளை வழங்கினார்.
1. மத்திய சலாசார நிதியத்தின் 2015-2019 காலப் பகுதிக்கான விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் புலப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையிலான குழுவொன்றை நியமித்தல்.
2. விசேட கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டதாகக் கோப் குழுவில் தெரிவிக்கப்பட்ட தனி நபரைக் கொண்ட உள்ளக விசாரணைக் குழுவைக் கலைப்பது.
3. குறிப்பிட்ட 209 கூட்டத்தின் கையொப்பமிடும் பட்டியலின் செல்லுபடித்தன்மையைப் பரிசீலிப்பதற்கு குறித்த பட்டியலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்புதல்.
4. மத்திய கலாசார நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் வெளிக்கொணரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கோப் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கு மீண்டும் குழு முன்னிலையில் அழைத்தல்.
5. மத்திய கலாசார நிதியத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்படவுள்ள புதிய குழுவின் அறிக்கையை 03 மாதங்களுக்குள் கோப் குழுவுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இதற்கு மேலதிகமாக, கோப் குழுவின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நிறுவனங்கள் குறித்தும் குழு உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். இது தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்துடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாக தலைவர் குறிப்பிட்டார்.

அதன் பிரகாரம், குழுவின் ஊடாக உப குழுக்களின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அத்தியாவசிய மற்றும் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை மாத்திரம் பிரதான குழுவிற்கு அழைக்கும் முறைமை தயாரிக்கப்படும் எனவும் தலைவர் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here