விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள்

228

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக 20 ஆயிரம் ஆசிரியர்கள் அவசியமாக உள்ள நிலையில், தற்போது 16 ஆயிரம் ஆசிரியர்களே இதுவரை பதிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மேலும் நான்காயிரம் ஆசிரியர்களுக்கான குறைபாடு நிலவி வருகிறது. அதனால் மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று(09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்காக 20ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதுடன் இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் 1300 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.

அவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழமையாக வழங்கப்படும் கொடுப்பனவில் இருந்து சுமார் இரண்டு மடங்காக வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொடுப்பனவு தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here