இலங்கை – அமெரிக்கா நட்புறவை தொடர்வதே எமது எதிர்பார்ப்பாகும்

200

நாம் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவோம், இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக நிதி உதவிகள், உரம் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளோம் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத் திட்ட முன்னெடுப்புகளை பார்வையிடுவதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் அமெரிக்க தூதுவர் ஜுலி சங் ஆகியோர் மட்டக்குளியில் அமைந்துள்ள புனித ஜோன் மகா வித்தியாலயத்துக்கு இன்று (13) விஜயம் செய்திருந்தனர்.

சகல நெருக்கடிகளிலிருந்தும் மீள்வதற்கு உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகளினூடாக இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அதன் ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

முன்னேற்றத்தை நோக்கியே நீங்கள் பாடசாலைக்கு வருகை தருகின்றீர்கள். பசியுடன் இருந்தால் உங்களால் அந்த முன்னேற்றத்தை அடைய முடியாது. எனவே, இலங்கையில் 1.7 மில்லியன் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கிய உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று 3,000,000 கர்ப்பிணிகள் மற்றும் தாய்மாரும் இந்த செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த ஆண்டு இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகிறது. அத்தோடு இலங்கை அதன் 75ஆவது சுதந்திர தினத்தையும் கொண்டாடுகிறது. இந்த நட்புறவை தொடர்வதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இன்று நீங்கள் கல்வி கற்பதற்காக எத்தனை பெற்றோர்கள், மூதாதையர்கள் தம்மை அர்ப்பணித்துள்ளனர் என்பதை நினைவுகூர வேண்டும். நாம் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவோம். உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட ஏனைய பல்வேறு வழிகளுக்கூடாகவும் நாம் எமது ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here