கோழி – முட்டைக் கைத்தொழில் தொடர்பில் கலந்துரையாடல்

257

கோழித் தீவன உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளத்தை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கோழி இறைச்சி மற்றும் முட்டைக் கைத்தொழிலை சீரான முறையில் முன்னெடுத்து, நாட்டின் கோழி மற்றும் முட்டைத் தேவையை தொடர்ச்சியாக பூர்த்தி செய்வது மற்றும் நியாயமான விலையில் நுகர்வோருக்கு வழங்குவது என்பன குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கால்நடைத் தீவனத்திற்குப் பயன்படுத்தப்படும் சோளத்தில் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள அளவு, எதிர்காலத்தில் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படும் அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு, இறக்குமதி செய்ய வேண்டிய சோளத்தின் அளவு தொடர்பான அறிக்கையொன்றை தயாரிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க விவசாய மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இந்த அறிக்கையை துரிதமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படும் சோள உற்பத்தி மற்றும் அதன் விலைகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் முதன்மையான கவனம் செலுத்தப்பட்டதுடன், வருடாந்த சோளத் தேவையில் இறக்குமதி செய்யவேண்டிய அளவினை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சாகல ரத்நாயக்க இதன்போது பணிப்புரை வழங்கினார்.

உலக சந்தையில் சோளத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பங்களில், இறக்குமதி செய்வதன் மூலம் உள்நாட்டு சோளத் தேவையை நெருக்கடியின்றி பூர்த்தி செய்ய முடியும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

தற்போதைய அரிசி தேவையை விட உள்நாட்டு அரிசி உற்பத்தி அதிகமாக உள்ளதால், அதிகப்படியான அரிசியின் ஒரு பகுதியை கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், மேலும் கால்நடை தீவனத்திற்கு அரிசி பயன்படுத்துவதற்கு அரசாங்கம் விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எனவே, மக்களின் அரிசி நுகர்வுத் தேவையையும் தற்போதைய அரிசி உற்பத்தியையும் துல்லியமாக மதிப்பீடு செய்து, அதிகப்படியான அரிசி கையிருப்பைக் கணக்கிட்டு உடனடியாக அறிக்கையொன்றைத் தயாரிக்குமாறு விவசாய மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கு சாகல ரத்னாயக்க பணிப்புரை விடுத்தார்.

மேலதிகமான உள்ள அரிசி இருப்புக்களை இதற்காக பயன்படுத்துவதன் மூலம், விவசாயிக்கான அரிசியின் விலையை ஸ்திரமாக பேணவும், கால்நடை தீவனத்திற்காக இறக்குமதி செய்யப்படும் சோளத்தின் தேவையை குறைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியதோடு , இதன் மூலம் வெளிநாட்டு செலவாணியை சேமிக்க முடியும் எனவும் சாகல ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here