follow the truth

follow the truth

August, 3, 2025
Homeஉள்நாடுசூழலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 90 பேருக்கு ஜனாதிபதி விருதுகள்

சூழலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 90 பேருக்கு ஜனாதிபதி விருதுகள்

Published on

உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளால் மாத்திரம் முடியாது எனவும் சூழலை மாசுபடுத்துவதற்கு காரணமாக உள்ள அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதியுதவி அளித்து இதற்குப் பங்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை முதன்மையான முயற்சிகளை எடுக்கும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) இடம்பெற்ற 2021-2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2021-2022” இல், கைத்தொழில், வணிகம், திட்டங்கள் மற்றும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகம் ஆகிய முக்கிய துறைகளின் கீழ் 90 பேருக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நாட்டின் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு பங்களித்ததற்காக விருது பெற்ற உங்கள் அனைவரையும் நான் பாராட்ட வேண்டும். அதற்காக தங்களை அர்ப்பணித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்திலும் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் போட்டிப் பொருளாதாரத்தின் அவசியத்தையும் அதாவது டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தின் அவசியத்தை பற்றியும் நான் உங்களுக்கு விளக்கியிருக்கிறேன்.

பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்பு தொடங்கும் வேளையில், இலங்கையை பசுமைப் பொருளாதாரமாக மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை பசுமைப் பொருளாதாரமாக மாறும்போது, அதற்கான புதிய சட்டங்களும் தேவைப்படும். நமது சுற்றாடல் சட்டம் 80 களில் நிறைவேற்றப்பட்டதுடன் அதன் பிறகு பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, அடுத்த சில ஆண்டுகளில் புதிய சுற்றாடல் சட்டம் மற்றும் பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான சட்டம், Living Entities Act, ஆகியவற்றை அறிமுகப்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்.

சிங்கராஜ, ஹோர்டன் சமவெளி, நக்கிள்ஸ் மலைத்தொடர் மற்றும் மஹாவெலி ஆகிய பகுதிகளை Living Entities பகுதிகளாக மாற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மேலும், வனப் பாதுகாப்புச் சட்டத்தை கருத்தில் கொண்டு, மீண்டும் காடுகளை உருவாக்கல், முத்துராஜவெல சதுப்பு நிலத்தை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் அழகை பாதுகாத்தல் போன்றவற்றுக்கு புதிய சட்டம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, எதிர்வரும் ஆண்டில் முன்வைக்கப்பட வேண்டிய ஏராளமான சட்டங்களின் வரைவு தயாரிக்கப்பட வேண்டும்.

மேலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உலகளாவிய பணிகளில் தனித்துவமான பங்கை வகிக்க இலங்கை எதிர்பார்க்கிறது ஈ மேலும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்காக காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க நாம் முன்மொழிந்துள்ளோம்.
காலநிலை மாற்றம் தொடர்பான அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனையவர்களை பயிற்றுவித்தல் மற்றும் பட்டப்பின் படிப்பு கற்கைகளையும் இப்பல்கலைக்கழகம் வழங்கும்.

எனவே, அபிவருத்தி அடைந்த நாடுகள், தொழில்மயமாக்கல் செயல்முறை, பல போர்கள் மூலம், பல்வேறு யுத்தங்களினால், குறிப்பாக இரண்டு உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போர் மூலம் காலநிலை பாதிப்பிற்கு பங்களித்தன. இப்போது அதன் விளைவுகளை நாம் அனுபவிக்க வேண்டியேற்பட்டுள்ளது. எனவே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பைத் தணிக்க நிதி தேவை என்று கூறுகிறோம். நம்மிடம் உள்ளதைத் தவிர, எங்களால் திரட்ட முடிந்ததைத் தவிர அதற்குப் பொறுப்பானவர்களிடமிருந்து நிதியைப் பெற வேண்டும்.

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க எல்லா நிதியையும் எம்மால் செலவழிக்க முடியாது. நாம் கல்விக்கு பணம் செலவழிக்க வேண்டும். மேலும், சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு போதுமான பணம் எங்களிடம் இல்லை.

உலகின் சில முன்னேறிய நாடுகள் தங்களிடமும் போதுமான பணம் இல்லை என்று கூறுகின்றன. என்னைப் பொறுத்தவரை, இது ஒரு பதில் அல்ல. அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இழப்பு மற்றும் சேதக் கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் பணம் இல்லை என்றால், இந்த முடிவுகளை செயல்படுத்த முடியாத நிலை எற்படும்.

அடுத்த விடயம், பல்வேறு அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் கடன் சுமையில் உள்ளன. இந்த நிலையில் இருந்து மீள நடவடிக்கை எடுத்த முதல் நாடு இலங்கை ஆகும். ஆனால் அது மட்டும் போதாது. கடன் சுமையில் இருக்கும் பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்துவதற்கான வளங்கள் இல்லை.

இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. ஒருபுறம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த நிதியை செலவிடல் மற்றும் அந்த நிதியை பெற்றுக்கொள்வதற்கான இயலுமை. இன்னொரு பக்கம் இந்த அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் கடன் சுமை. இந்த இரண்டு பிரச்சினைகளும் ஒன்றாக இணைக்கப்பட்ட இரண்டு பிரச்சினைகள் ஆகும்.

எனவே நாம் இது குறித்து குரல் எழுப்புவதோடு கலந்துரையாடுவதும் அவசியம். அடுத்த காலநிலை மாநாட்டில் இந்தப் பிரச்சினையை இலங்கை நிச்சயமாக எழுப்பும் எதிர்பார்க்கின்றது.

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எங்களின் அனைத்து திட்டங்களையும் உங்களுக்கு தெளிவுபடுத்தவே நான் விரும்புகிறேன். சுற்றாடல் அமைச்சர் சர்வதேச அளவில் எடுக்கும் முயற்சிகளுக்கு தலைமை வகிப்பதோடு, அவருக்கு வெளியுறவு அமைச்சும் ஆதரவு வழங்குகிறது. இது நமது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அங்கமாகும். காலநிலை மாற்றதால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தேவையான வளங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பெற்றுக் கொடுப்பதில் இலங்கை முன்னணியில் இருப்பதை நான் உறுதி செய்கிறேன் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...