மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்

303

” சமுர்த்தி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உதவி திட்டங்களில் இருந்து மலையக பெருந்தோட்ட மக்களின் பெயர்கள் வெட்டப்படுவதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இது உண்மை கிடையாது. இம்முறை உரிய வகையிலேயே பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உதவி திட்டங்களை பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் அது கிடைக்கும்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று(22) நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முன்னர் இந்த குறைபாடு இருந்திருக்கலாம். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை உள்ளது, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன கிடைக்கின்றன எனக்கூறி கிராம அதிகாரிகளால் அவர்கள் ஒதுக்கப்பட்டிருக்கலாம். அப்போதும் நாம் தற்காலிக தீர்வுகளை பெற்றுக்கொடுத்தோம் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இம்முறை அதிகாரிகள் நேரில் சென்று தகவல்களை திரட்டினர். எவருக்கும் பாகுபாடு காட்டப்படமாட்டாது. உதவிக் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் அது நிச்சயம் கிடைக்கும். இது தொடர்பில் நிதி இராஜங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் நாம் பேச்சு நடத்தினோம். நாடாளுமன்ற உரையின்போது பெருந்தோட்ட மக்கள் பற்றி அவர் தெளிவாக குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேரில், 85 ஆயிரம் பேர் வரை பெருந்தோட்டப்பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இது 52 வீதமாகும். பட்டியலில் குறைப்பாடுகள் உள்ளனவா என்பது பற்றி ஆராய்ந்து, அவற்றை நிவர்த்தி செய்யும் பணியிலும் ஈடுபடுகின்றோம். எனவே, மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here