‘அஸ்வெசும’ வெளியிடப்பட்ட பட்டியல் இறுதிப் பட்டியல் அல்ல

669

பல்வேறு அரசியல் குழுக்களின் அழுத்தங்களில் சிக்காமல் பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாத அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு காலம் முடிவடைந்த பின்னர் தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

“அஸ்வெசும” சமூக நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதார மீட்சி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டம் தொடர்பில் சமூகத்தில் சில தரப்பினர் மேற்கொள்ளும் தவறான பிரச்சாரங்களினால் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், பகிரங்கப்படுத்தப்பட்ட பட்டியல் இறுதி பட்டியல் அல்ல என்றும் தெரிவித்தார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் கூறியதாவது:

2001 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலப் பலன்கள் சட்டத்தின் படி, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 06 துறைகளின் பிரகாரம் குறிகாட்டிகளின் கீழ் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இதன்படி, தகுதியான பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது இறுதிப் பட்டியல் அல்ல என்பதை வலியுறுத்த வேண்டும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பெயர் உள்ளடங்காத நபரோ அல்லது குடும்பத்தாரோ இருப்பின் மேன்முறையீட்டு காலத்திற்குள் தங்களின் மேன்முறையீடுகளை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும், அதில் தகுதியற்றவர்களின் பெயர் இடம் பெற்றிருந்தால், அது குறித்தும் ஆராயப்படும்.

பல்வேறு பிரச்சாரங்கள் அல்லது தனிப்பட்ட அழுத்தங்கள் காரணமாக மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், சில அரசியல் குழுக்களின் தேவைக்காக போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். மேலும், அரசினால் அறிவிக்கப்பட்ட முறைக்கு ஏற்ப அனைவரும் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

எவ்வாறாயினும், மேல்முறையீட்டு காலம் முடிவடைந்த பிறகு அஸ்வெசும சமூக நலப் பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத் தயாரிக்க எதிர்பார்க்கிறோம். எவருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எமக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுதவிர ,சிறுநீரக உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியலையும் விரைவில் வெளியிட எதிர்பார்க்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here