ஜூலை மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் கடந்த 07 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாரளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அதற்கமைய, ஜூலை 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது. இந்த ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2023 ஜூலை 18 செவ்வாய்க்கிழமை சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2325/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட தீர்மானம் (அத்தியாயம் 235) மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2335/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட மூன்று ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
ஜூலை 19 ஆம் திகதி ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் என்பவற்றின் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
அதனையடுத்து, தனியார் உறுப்பினர் சட்டமூலமான இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக பிரேரிக்கப்படவுள்ளது.
2023 ஜூலை 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.