இந்திய ரூபாய் – டொலரும் புழக்கத்தில் இருந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியம்

1135

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த இலங்கையை உலகிற்கு திறந்துவிட எதிர்பார்த்துள்ளதாகவும், அது தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையை அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதார முறைக்கு கொண்டு செல்வது தனது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று (13) நடைபெற்ற இந்திய வர்த்தகர்களுடனான விசேட சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வர்த்தக சமூகத்தினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டதுடன், வர்த்தக சமூகத்தினருடன் ஜனாதிபதி புகைப்படமொன்றையும் எடுத்துக் கொண்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமானது.

தற்போது ஆசியப் பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடாக இந்தியா தனது அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளது.

இந்தியா போன்ற பலம் வாய்ந்த நாட்டுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரும் நன்மை பயக்கும். பிரதமர் மோடி மேற்கொண்ட நிதிக் கொள்கையால், பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற முடிந்தது. அந்த நிதிக் கொள்கைகள் இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்காலத்துக்கும் உதவுக்கூடியதாக அமைந்துள்ளது.

நான் இலங்கையை மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரத்துக்கு கொண்டு செல்லவே விரும்புகிறேன். பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் இலங்கையின் பொருளாதார நிலையை வலுவான நிலைக்கு உயர்த்த முடியும். அதற்கு சட்டவிதிகள் அவசியம். போட்டி, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தேவையான சட்டங்களை எதிர்காலத்தில் சீர்திருத்த எதிர்பார்க்கின்றோம்.

நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த, இந்தியாவுடன் நெருங்கிய உறவை வைத்திருக்க வேண்டும். இலங்கையின் பொருளாதார நோக்கங்களையும் இலக்குகளையும் அடைவதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. இரு நாடுகளுக்குமிடையில் புதிய உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு அதற்கான துறைகளை அவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.

இலங்கையில், இந்திய ரூபாயின் புழக்கம் குறித்து இங்கு கூறப்பட்டது. இந்திய ரூபாய் மட்டுமல்ல டொலரும் புழக்கத்தில் இருந்தால் அது இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமையும். இலங்கையில், இந்திய ரூபாய் புழக்கத்தில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், அது உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும். அது தொடர்பான அவசர சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here