விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் கூச்சலிட்டுக் கொண்டு இருந்துவிட்டு ஓட்டுக் கேட்கவந்தால் அவர்களுக்கு மண்வெட்டி காத்திருக்கிறது என்று வெலிமடை பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இரசாயன உரத்தை தடை செய்து இயற்கை உரத்தின் மூலம் விவசாயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் இரசாயன உரம் வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினந்தோறும் நாடளாவிய ரீதியில் விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பதுளை – வெலிமடை விவசாயிகள் நேற்று நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, மண்வெட்டி இனி வயல் வெட்டுவதற்கல்ல, ஓட்டு கேட்டுவரும் அரசியல்வாதிகளுக்கும் காத்திருக்கிறது என்று தெரிவித்தனர்.
”விவசாய அமைச்சருக்கு இதுவரை கௌரவமாகவே பேசியுள்ளோம். இந்த மண் வெட்டியை நாம் வயல் வெட்டுவதற்கே பயன்படுத்தினோம். எனினும், எமது பொறுமைக்கும் எல்லை உண்டு. தற்போது பெரும்போகம் ஆரம்பித்துள்ளது. ஆனால் விவசாயத்தை முன்னெடுக்க வழியில்லை. விவசாய அமைச்சர் தெரியாத விடயங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்.
விவசாய அமைச்சர் செய்ய முடியும் என்று கூறுவதை இங்கு வந்து களத்தில் செய்துகாட்டுமாறு கூறுகிறோம்.
அப்படி செய்தால் விவசாய அமைச்சர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இரசாயன உரம் இன்றி விவசாயம் செய்ய முடியும் என்பதை நிருபித்தால் நான் இங்கிருந்து பொரலந்த நகர் வரை நான் தவிழ்ந்து செல்வேன்.
அப்படியில்லாமல் தெரியாத விடயங்களைப் பேசிக் கொண்டிருந்தால், நாம் இந்த மண் வெட்டியை இனிமேல் வயல் வெட்ட பயன்படுத்தமாட்டோம். மீண்டும் ஓட்டு கேட்டு வரும்போது, உங்களை வெட்டவே பயன்படுத்த நேரிடும்.” என்று வெலிமடை விவசாயிகள் ஆக்ரோசமாக தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.