இலங்கைக்குள் தரமற்ற மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெளிவான தகவல் கிடைத்துள்ளதாக ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மருந்து மற்றும் சுகாதார முகாமைத்துவ ஆலோசகரும் வளவாளருமான வைத்தியர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
சுமார் மூன்று நிறுவனங்கள் மருந்துகளை மறைமுக யுக்திகளை பயன்படுத்தி இறக்குமதி செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்து வகைகளில், சில மருந்துகளை தரம் குறைந்த மருந்துகள் என வகைப்படுத்த முடியுமா?
“.. தரமற்ற மருந்துகள் என்று ஒன்று இல்லை என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்திருந்தமையானது உண்மையானது. மருந்துகளில் தரமற்றவை என்று இல்லை ஆனால் தரம் குறைந்த அதாவது குறைந்த திறனைக் கொண்ட என்று நாம் கூற வேண்டும். நாட்டுக்கு மருந்துகளை கொள்வனவு செய்யும் நான் ஆராய்ந்த மூன்று நிறுவனங்களில் ஒரு நிறுவனமானது டெண்டர் மூலம் 2015ம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இருந்து மிகவும் குறைந்த குண திறனைக் கொண்ட மருந்துகளை கொள்வனவு செய்துள்ளது. அந்த மருந்துகள் தான் அண்மைக்காலமாக நாடு முழுவதும் ஆட்டங் காட்டுகின்றது..”
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தரமற்ற மருந்துகள் குறித்தும் வைத்தியர் சஞ்சய் பெரேரா கருத்து தெரிவித்தார்.
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதன் மூலம் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 80 வீதமானவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அண்மையில் நடைபெற்ற சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுவில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்படும் மருந்துகள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டை தாம் மறுப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 278 வகையான மருந்துகள் நாட்டின் சுகாதார அமைப்பில் பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.