எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளும் வகையில் கைவிடப்பட்டுள்ள 11,000 ஏக்கர் நெல் வயல்களில் மீண்டும் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்தார்.
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக கைவிடப்பட்டுள்ள நெல் வயல்களில் மீண்டும் பயிரிடும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும், இதற்காக அரசாங்கம் 420 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா,
கடந்த காலங்களில் எமது நாட்டில் அரிசி மேலதிக கையிருப்பு இருந்ததாகவும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அந்நிலை வீழ்ச்சி அடைந்ததால் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், இந்த வருடம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் மீண்டும் பழைய நிலைக்கு மீளலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.
எமது நாட்டின் பயன்பாட்டுக்கு சுமார் 24 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி தேவைப்படுவதாகவும், அந்த வகையில் தற்போது முன்னெடுக்கப்படும் முறையான பொறிமுறைகளின் மூலம் எதிர்காலத்தில் எமது நாடு அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சோளம், உழுந்து, பயறு உள்ளிட்ட மேலதிக பயிர்களின் விளைச்சளை அதிகரிக்க விவசாய அமைச்சரின் ஆலோசனையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உழுந்து, பயறு ஆகியவற்றைப் பயிரிடும் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் உழுந்து பயறு ஆகிய பயிர்களில் பற்றாக்குறை ஏற்படாது என்றும் தெரிவித்தார்.