காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான பொருளாதார முறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் விரைவான அபிவிருத்தியை அடைய முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக புதிய சட்டங்கள் கொண்டுவர வேண்டுமெனவும் தெரிவித்தார்.
கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் இன்று (08)இடம்பெற்ற இலங்கைக்கான முக்கிய வர்த்தக வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு அடித்தளமிடும் நிகழ்வில் (Launch of Key Trade Facilitation Initiatives in Sri Lanka ) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Trade Facilitation Initiatives in Sri Lanka இணையத்தளமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:
இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை கற்றுக்கொண்ட விடயங்களில் ஒன்று, இந்த வங்குரோத்து நிலையிலிருந்து மீள வேண்டுமானால் நாம் போட்டிப் பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நாம் பாடுபட வேண்டும். இதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், பொருளாதாரத்தை மறுசீரமைப்பதில், தனியார் துறைக்கும் பொருளாதாரத்தில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தனியார் துறைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் எப்போதும் தயாராக உள்ளது.
முதலீடாக இருந்தாலும் வர்த்தகமாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க புதிய பொருளாதார ஆணைய சட்டத்தின் ஊடாக திட்டங்களை தயார் செய்ய வேண்டும். அதற்கேற்ப நாமும் மாற வேண்டும்.
இல்லையெனில், ஒரு நாடோ பொருளாதாரமோ முன்னேறாது. பொருளாதாரம் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகரும் போது, அனைத்துமே அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
நாங்கள் புதிய சந்தை வாய்ப்புகளைத் தேடினோம். சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம் . பிராந்திய விஸ்தரிப்புப் பொருளாதார கூட்டணி (RCEP) உடன் இணைவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது பாரிய வர்த்தக வாய்ப்பாக கருதலாம். வர்த்தக வசதி மற்றும் டிஜிட்டல் மாற்றம் இல்லாமல் அந்த சந்தையில் நுழைய முடியாது. மேலும், சந்தையை விரிவுபடுத்த இந்தியாவுடன் ஆலோசித்து வருகிறோம்.
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்க சந்தைகளை கையாளும் போது வர்த்தக வசதி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என்பன இலங்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.