உலக வானிலையியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட ரேடார் கட்டமைப்பை கோனகல பிரதேசத்தில் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தேல்வியடைந்த வேலைத்திட்டம் காரணமாக அரசாங்கத்துக்கு 78 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) அண்மையில் தெரியவந்தது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்துக் கலந்துரையாடப்பட்டபோதே இந்த
விடயம் தெரியவந்தது.
2008ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் குறித்த ரேடார் கட்டமைப்புக்காக 402 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், உலக வானிலையியல் அமைப்பினால் 323 மில்லியன் ரூபா மீண்டும் வழங்கப்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன்னர் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி குறித்த இயந்திரத்தைப் பரிசோதித்துப் பார்த்ததுடன், இது இயங்கும் நிலையில் இல்லையென்பதால் அதனை நாட்டுக்குக் கொண்டு வரவேண்டாம் என்று அறிவித்திருப்பதாகத் தெரியவந்தது.
453 மழை மானிகள் பொருத்தப்பட்டுள்ள போதும் அதில் 73 மானிகள் இயங்க முடியாத நிலையில் இருப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் 2018ஆம் ஆண்டு 122 தானியங்கி மழை மானிகள் காணப்பட்டபோதும் பற்றரி செயற்படாமை போன்ற காரணிகளால் அவற்றில் 70 மானிகள் இயங்காமை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த மழை மானிகளை முறையாக நிறுவி உடனடியாகத் தரவுகளைப் பெறுவதற்கான திட்டத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு அவர் திணைக்களத்திற்கு அறிவித்தார்.