சுற்றுலாத்துறை மூலம் நாட்டுக்கு பெருமளவு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் சீகிரியாவை சுற்றியுள்ள பிரதேசத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் 15 மில்லியன் டொலர் செலவில் சீகிரியாவைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் சுற்றுலா வசதிகள், கிராமப்புற அபிவிருத்தி, வருமானம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், சீகிரியா புதிய கிராமம் வாகன தரிப்பிடம் மற்றும் வர்த்தக வளாகம், நூற்றாண்டு வீதி, சீகிரியா அருங்காட்சியகம், வெளிநாட்டவர் வாகன நிறுத்துமிடம், அணுகல் வீதி அபிவிருத்தி மற்றும் பிதுரங்கலை சுற்றியுள்ள பகுதி, கலுதிய குளம், மாபாகல, ராம கலே முதல் பிதுரங்கல வரையிலான பாரம்பரிய வீதி என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
இதனுடன், சீகிரியா ஏரி ஒரு பெரிய சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், கலேவெல ஏரி மற்றும் இனாமலுவ ஏரியை சுற்றியுள்ள பகுதிகளும் அபிவிருத்தி செய்யப்படும். இதற்கு மேலதிகமாக தம்புள்ளை திகம்பதான கழிவு முகாமைத்துவ திட்டத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்கள் இந்த அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.