உள்ளூராட்சி மன்றங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார்.
இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வந்த ஆனால் கடந்த காலத்தில் இழந்த அந்த வாய்ப்பை மீண்டும் இளைஞர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் அதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவதும், தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டில் இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்புகளை வழங்குவதும் ஜனாதிபதியின் வேலைத்திட்டம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தொலவத்த தெரிவித்தார்.
இளைஞர் பிரதிநிதித்துவச் சட்டம் , அமைச்சரவையில் இரண்டு முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இளைஞர் தினத்தையொட்டி, அடுத்த பாராளுமன்ற அமர்வில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை 25% ஆக அதிகரிப்பதற்கான சட்டமூலத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார்.
தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் சட்டமாக மாற்ற தேவையான ஆதரவை வழங்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதில் அவரது பங்களிப்பை பாராட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எமது நாட்டில் நீண்டகாலமாக இருந்து வந்த ஆனால் கடந்த காலத்தில் இரத்துச் செய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதித்துவத்தை மீளப் பெறுவதற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய கட்சிகளினதும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார்.