அதிகாரப் போட்டியில் சிக்கிக் கொள்ளாமல், பக்கசார்பின்றி முன்னேற வேண்டும்

202

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இதன் போது புதிய பொருளாதாரப் போக்குகளைப் போன்றே காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து காரணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சன்ன குணதிலக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் தொண்டர் படையணிக்கு ஜனாதிபதி வர்ணம் சூட்டும் நிகழ்வு நேற்று (18) பூஸ்ஸ கடற்படை உயர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய சவால்களை ஆயுதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது எனவும், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் உயர் திறன்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவு கொண்ட பாதுகாப்பு படையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதை இந்து சமுத்திரத்தில் தான் அமைந்துள்ளது. இலங்கை அதில் ஒரு முக்கிய இடத்தைப் வகிக்கிறது. இந்த அதிகாரப் போட்டியில் சிக்கிக் கொள்ளாமல், பக்கசார்பின்றி முன்னேற வேண்டும். அங்கு நமது பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பல நாடுகள் உள்நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற உள்நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதற்கு நாமும் தயாராக வேண்டும். இன்று நாம் உலக அரசியலில் தொடர்புபட்டுள்ளோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.அவ்வாறானால், எமது நாட்டின் எதிர்கால தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய நான் எதிர்பார்க்கிறேன்.

ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மீளாய்வை செய்து வருகின்றன. நாட்டிற்கு எத்தகைய அச்சுறுத்தல்கள் உள்ளன? நாட்டின் வளங்கள் என்ன?அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்கள் மீளாய்வு நடத்துகின்றனர். அதற்கேற்ப அவர்களது இராணுவ பலத்தையும் பொருளாதார பலத்தையும் ஒப்பிட்டு பார்த்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நாமும் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்று, டோனர் போன்ற பல நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன. இந்து சமுத்திரத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, நமது கடல் பாதுகாப்புக்காக, நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், விமானங்கள் மற்றும் டோனர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்று எம்மால் கூற முடியாது. இன்றைய காலத்தை விட எதிர்காலத்தில் அதிக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, துரித வளர்ச்சியை எட்ட முடிந்தால், அதற்குத் தேவையான பணத்தை செலவிட முடியும். வறிய நாடாக எம்மால் இவற்றைச் செய்வது கடினம். எதிர்கால சவால்களை கடந்த காலத்திலிருந்து எதிர்கொள்ள முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here