ஐக்கிய மக்கள் சக்தி நமது நாட்டின் குழந்தைகளுக்காக மூச்சு,பிரபஞ்சம் போன்ற திட்டங்கள் மூலம் நல்ல சுகாதார கட்டமைப்பை வழங்குவதற்காகவே முதலீடு செய்ததாகவும், இந்த மூச்சு மற்றும் பிரபஞ்சம் திட்டங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், மாறாக நாட்டின் பிள்ளைகளையும் சுகாதாரத் துறையையும் அபிவிருத்தி செய்வதன் மூலம் மக்களுக்கு ஆதரவளிப்பதற்காவே ஆரம்பிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி என்ற வகையில் இந்த செயற்பாடுகள் அனைத்தும் பட்டம் பதவியை அடைவதை எதிர்பார்த்து செய்யப்படுவதில்லை என்றும், அரசாங்கம் மற்றும் அரச சார்பு ஊடகங்கள் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணையப்போவதாக போலியான செய்திகள் வெளியாகியிருந்த போதிலும்,
மக்களுக்குத் துரோகமிழைத்து ஒருபோதும் அதிகாரத்தைப் பெறத் தயாராக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் மினுவாங்கொடை ரெஜி ரணதுங்க ஆரம்பப் பிரிவுப் பாடசாலைக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் வழங்கும் நிகழ்வில் இன்று (29) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சமீபகாலமாக குடிநீர் பிரச்சினையில் சாதி, மத வேறுபாடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், இதற்காக அரசாங்கத்திற்கு தன்னால் இயன்ற ஆதரவை வழங்குவதாக கூறிய போது சமூக வலைத்தளங்கள் ஊடாக சஜித்-ரணில் டீல் என போலியான செய்திகளை கட்டமைத்ததாகவும், ரணிலுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்குப் பதிலாக, கோட்டாபய மற்றும் ராஜபக்ச குடும்பத்துடன் டீல் செய்து நேரடியாக ஜனாதிபதியாகும் வாய்ப்பு தனக்கு இருந்ததாகவும், இத்தகைய மக்கள் ஆணை இல்லாத பதவியை தான் ஏற்கவில்லை என்றும், மக்களின் ஆசியுடனும்,மக்களின் நம்பிக்கையுடனும்,மக்கள் ஆணையுடனுமே ஒரு நாள் இவ்வாறானதொரு பதவிக்கு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பதவியை எதிர்பார்த்து நாட்டுக்கு சேவை செய்யவில்லை என்றும், இந்த பதவி சூதாட்டத்தில் இருந்து நம் நாடு விடுபட வேண்டும் என்றும், ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாளிகைகளுக்குள் போடும் டீல் அரசியல் கலாசாரம் துடைத்தெறியப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டைப் போன்றே நாட்டின் பல்வேறு தரப்பினருக்குச் சொந்தமான ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த விட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நிதி வங்குரோத்து நிலைக்கும் மேலாக, இன்று உலக வல்லரசுகளின் பங்குகளை பறிக்கும் நாடாக நம் நாடு மாறிவிட்டதாகவும், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் எமது நாடு ஏல நிலமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.