சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

129

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியம் தற்போதைய அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் நீண்டநேர கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இலங்கையானது சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் முன்னேற்றம் மற்றும் அரசாங்கம் விரைவில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்தான விடயங்கள் குறித்து இங்கு முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் அனைத்து கடனாளிகளையும் நியாயமாக நடத்துவதுடன் அவதானம் செலுத்தப்பட வேண்டிய குழுக்களுக்கு விசேட கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.

நிலையானதொரு பொருளாதார நல்வாழ்வுக்கு, குறுகிய கால பொருளாதார குறிகாட்டிகளின் முன்னேற்றம் போலவே சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சிக் கோட்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய தேவையின் முக்கியத்துவமும் இங்கு முன்வைக்கப்பட்டது.

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தில்,இந்நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி குழுக்களுக்கு இடையில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here