இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள நாட்டின் வீதிக் கட்டமைப்பின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டு, அந்த வீதிகளின் நிர்மாணப் பணிகள் துரிதமாகப் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத்,
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு, வீதி அபிவிருத்திப் பணிகள் குறித்து முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. A மற்றும் B தர வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பராமரிக்கப்படுகின்றன. இந்த நாட்டில் வருடாந்தம் 12,225 கிலோமீற்றர் நெடுஞ்சாலைகள் மற்றும் 312 கிலோமீற்றர் அதிவேகப் பாதைகள், 5432 பாலங்கள், 12 மேம்பாலங்கள் போன்றவற்றை வீதி அபிவிருத்தி அதிகார சபை பராமரித்து வருகின்றது.
மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், கல்வி, மற்றும் சுகாதாரப் பணிகளை சிறப்பாக செயற்படுத்தவும் ஒரு நாட்டின் வீதிக் கட்டமைப்பு மிகவும் முக்கியமானது.
இன்று அனைவரும் உற்பத்திப் பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு எடுத்துச்செல்ல போக்குவரத்துக்கு வசதிகள் சிறந்த முறையில் அமைய வேண்டும். எனவே வீதிக்கட்டமைப்பு ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாததாக உள்ளது.
எமது நாட்டின் வீதிக் கட்டமைப்பு நன்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் வீதிகளை விரிவுபடுத்தி மேம்படுத்த வேண்டும். வீதி அபிவிருத்திக்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைப்பது குறைவு. சிறிய பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளை பராமரிக்க ஆண்டுதோறும் ஏராளமான பணத்தை செலவிட வேண்டியுள்ளது.
அதிவேகப் பாதைகள் ஒரு நாட்டுக்கு அவசியம். எமது நாட்டில் ஏற்பட்ட டொலர் பிரச்சினை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளைப் பாதித்தது. மீரிகம, குருநாகல் அதிவேகப் பாதையின் பணிகள் நிறைவடைந்துள்ளன. பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான 31 கிலோமீற்றர் கொண்ட அதிவேகப் பாதையின் முதல் 13 கிலோ மீற்றருக்கான பணிகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றன.
இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள நாட்டின் வீதி அபிவிருத்திப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த வகையில் அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் நாட்டின் நெடுஞ்சாலைகளை பராமரிக்கவும், இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் தொடங்கவும் பணம் ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதால், குறித்த பணிகளை விரைவில் நிறைவு செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.