2048 – பசுமைப் பொருளாதார திட்டம் – நிதி பெறுவதற்கு பல நாடுகளிலிருந்து ஜனாதிபதிக்கு ஆதரவு

222

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 – பசுமைப் பொருளாதாரத் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்வதற்கான ஒப்பந்தங்களை இலங்கை ஏற்கனவே செய்துகொண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சர்வதேச மாநாடுகள் மற்றும் அரச தலைவர்களின் சந்திப்புகளில் ஜனாதிபதி விடுத்த கோரிக்கைகளின் பலனாக குறுகிய காலத்தில் இந்த ஒப்பந்தங்களை செய்துக்கொள்ள அந்த நாடுகள் இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிய அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் பசுமை முதலீடுகளுக்கான கதவுகளைத் திறக்கும் Joint Crediting Mechanism (JCM) இந்தச் செயற்பாடுகளின் மைல்கல் இலக்காகும் என்றும் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 101 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போதே விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதியின் காபன் கிரெடிட் திட்டம் உள்ளிட்ட சர்வதேச முயற்சிகளின் பலனாக, சிங்கப்பூருடனும் இலங்கை ஒப்பந்தத்தில் கைசாத்திட முடிந்துள்ளதெனவும் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைக்க சர்வதேச சமூகத்தின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஊடாக விவசாயிகள் உட்பட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க,

காலநிலை அனர்த்தங்கள் தொடர்பில் செயற்படுவதற்கு காலநிலை மாற்றம் தொடர்பிலான (COP) மாநாட்டில் சர்வதேச ரீதியில் உலக நாடுகள் ஒன்றுபட்டுச் செயற்படுகின்றன. அத்தோடு, காலநிலை அனர்த்தங்கள் தொடர்பிலான தேசிய மட்டத்திலான நிர்ணயிப்புக்களுக்கான ஒத்துழைப்புக்களையும் ( National Determine Contribution) அனைத்து நாடுகளும் வெளிப்படுத்தின.

காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புக்களை மட்டுப்படுத்தல், பாதிப்புக்களுக்கு மத்தியில் வலுவாக எழுச்சி பெறல், பாதிப்புக்களுக்கு ஈடுகொடுத்தல் தொடர்பிலான முறைமைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதன் மூலம் சூரிய சக்தி, நீர் மற்றும் காற்றாலை மின்சாரம் , புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆகியன தொடர்பில் இலங்கை கவனம் செலுத்த முடியும். அண்மையில் எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலநிலை சுபீட்சத்துக்கான திட்டத்தினை (Climate Prosperity Plan) முன்மொழிந்தார்.

இதன்போது, காலநிலை மாற்றத்தைக் கையாள அவசியமான நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுடன் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நிதி ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தை பலமான நாடுகளுக்கு இலங்கை உள்ளிட்ட சிறிய நாடுகள் வலியுறுத்தியிருந்தன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாநாட்டிலும் ஏனைய சர்வதேச மாநாடுகளிலும் இது தொடர்பில் பெருமளவில் வலியுறுத்தியிருந்தார். பல வருட முயற்சிகளின் பலனாக டிசம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான மாநாட்டில், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச நிதியமொன்றை உருவாக்குவதற்கான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, COP 28 உச்சிமாநாட்டில் காலநிலை நீதிக்கான கூட்டாக நாங்கள் பணியாற்றி வருவதோடு, பாதிப்பு மற்றும் இழப்பீடுக்கான நிதியம், காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான செயற்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய, தேசிய காலநிலை மாற்ற சட்டத்தை தயாரிப்பதற்கான சகல வழிமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்துக்கு முன்னுரிமை அளித்து, உலக நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் புதிய சுற்றாடல் சட்டத்தை தயாரிப்பதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டத்திலும் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடுகள் சட்டப்பூர்வமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் முன்னெடுக்கப்படும் பட்சத்திலு முழுமையான நன்மைகளை அடைய முடியும்.

இந்த அனைத்து முதலீடுகளும் சுற்றாடல் பாதுகாப்பிற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றாடல் பாதுகாப்புக்கள் அதிகரிக்கும் அளவுக்கு காலநிலை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புக்களின் தன்மைகளையும் குறைத்துக்கொள்ள முடியும். அதனை விவசாய, மீன்பிடி உள்ளிட்ட பல துறைகளுக்கும் கிடைக்கும் நன்மை எனவும் சுட்டிக்காட்ட முடியும் என்றார்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here