நாளை 61 ஆவது வருடப் பூர்த்தியை கொண்டாடும் மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லம்

115

இலங்கையின் முன்னணி அநாதை இல்லமான மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லம், தனது 61ஆவது வருடப் பூர்த்தியை நாளை சனிக்கிழமை (14) கொண்டாடுகின்றது.

இலங்கையின் முஸ்லிம் அநாதை சிறுவர்களுக்கு அவர்களது எதிர்காலத்தை வளப்படுத்த உருவாக்கப்பட்ட மிகப் பெரும் சொத்தாகக் கருதப்படும் இந்த இல்லம், 1962ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி, கம்பஹா மாவட்டம், பியகம தேர்தல் தொகுதியில் “மாகொல” எனும் ஊரில் உருவாக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 61 வருடங்களாக இலங்கை முஸ்லிம் அநாதை சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பில் மிகப் பெரும் அர்ப்பணிப்புக்களை செய்துள்ள மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லம், தனது 62ஆவது ஆண்டில் நாளை காலடி எடுத்து வைக்கின்றது.

மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்ல பழைய மாணவர் சங்கம், இதன் 61ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, நாளைய தினம் சிறப்பு நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது. மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லத்தின் மள்வானை கிளையில் இந்த சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, சுமார் 3000இற்கும் அதிகமான அநாதை சிறுவர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ள இந்த இல்லம், தந்தையை இழந்த ஆண் மாணவர்களுக்கு மேலதிகமாக, தெரிவு செய்யப்பட்ட அநாதை சிறுமியரை அவர்களது வீட்டில் வைத்தே பராமரிக்கத் தேவையான நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றது.

இந்நிலையில் சமூகத்தின் மிகப் பெரும் சொத்தான இந்த அநாதை இல்லத்தின் எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பாகத் தொடரவும் அதற்கான ஒத்துழைப்பை வழங்கவும், 61ஆவது வருடப் பூர்த்தி நிகழ்வில் அனைத்து பழைய மாணவர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு, மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லத்தின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் எஸ்.ஏ.சி.எம்.முனவ்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here