ஊழலைக் குறைத்து வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதே அரசின் முக்கிய நோக்கம்

216

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை நிறைவுசெய்த பின்னர் ஏற்பட்ட அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாடானது, பலதரப்பு கடன் வழங்குனர்களுக்கு எஞ்சிய தவணைகளை செலுத்துவதற்கும் கடன் மறுசீரமைப்பைத் துரிதப்படுத்துவதற்கும் உதவும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால், இந்த அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு, அங்கீகாரம் வழங்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ளும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,

இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள், வழங்கிய தலைமைத்துவம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் உட்பட மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் வழங்கிய பங்களிப்புகள் மாத்திரமன்றி, நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வழங்கிய ஆதரவுகள் மற்றும் அர்ப்பணிப்புகள் இந்தப் பணிகளை முன்னெடுக்க எமக்கு மிகவும் இலகுவாக அமைந்தது.

இந்த அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாடு, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய பலதரப்பு கடன் வழங்குனர்களுக்கு எஞ்சிய தவணைகளைச் செலுத்துவதற்கும் அதன் மூலம் சர்வதேச தரப்பினர்களுடன் கடன் மறுசீரமைப்பைத் துரிதப்படுத்துவதற்கும் உதவும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாடுகளையும் விரைவில் நிறைவு செய்யலாம். ஊழலைக் குறைத்து வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இலங்கையின் பொருளாதாரத்தை தற்போதைய நிலைக்கு கொண்டு வந்ததற்காக சர்வதேச நாணய நிதியம் தமது பாராட்டைத் தெரிவித்தது. இதன் ஊடாக இலங்கை மீதான சர்வதேச நம்பிக்கை மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கேற்ப, இந்நாட்டின் பொருளாதாரம் மேலும் ஸ்திரமான நிலைக்குச் செல்ல வேண்டும்.” என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here