IMF இரண்டாவது தவணை டிசம்பரில் கிடைக்கும்

180

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழ் இரண்டாவது தவணை டிசம்பர் மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறுகிய கால இலாப நோக்கமின்றி வீழ்ச்சியடைந்த தேசிய பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தின் ஆரம்பமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

2024 வரவு செலவுத்திட்டத்தில் எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர். அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு, முதியோர் மற்றும் அங்கவீனர் கொடுப்பனவு உயர்வு உட்பட கல்வி, சுகாதாரம், பிரதேச அபிவிருத்தி மற்றும் காணி உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் வழங்க அரசாங்கத்திற்கு வருமானம் தேவை. நாம் செலவிடும் தொகைக்கு ஏற்ப வருமானத்தை நாம் ஈட்டிக்கொள்ள வேண்டும். அதுதான் வரவு செலவுத் திட்டமாகும். அரசாங்கம் பெரும்பாலும் வரி வருமானத்தில் இருந்துதான் இவ்வாறான நிவாரணக் கொடுப்பனவுகளை மேற்கொள்கின்றன.

எனவே நாம் வரவு செலவு என்ற இரண்டிலும் சமநிலையைப் பேண வேண்டும். அதிகமான நிவாரணங்களை வழங்க வேண்டுமாயின் வரி விதிப்புகளை உயர்த்த வேண்டியேற்படும். இந்தப் பொறிமுறையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பத்தாயிரம் அதிகரித்தால் அதற்கு மேலதிகமாக கேட்கின்றனர். இந்த அடிப்படைப் பொருளாதார விடயங்களை நாம் தெரிந்து கொண்டே கேள்வி எழுப்ப வேண்டும். நடைமுறை ரீதியாக நாம் சிந்திப்போமாயின் அவை வெறும் அரச விரோத கோஷங்களாகும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அவை நடைமுறையில் சாத்தியமற்றவை என்பதை இன்று இந்நாட்டு மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

நாம் குறித்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லாமையே இந்த அனைத்து பொருளாதார நெருக்கடிகளுக்கும் காரணம் என்று எதிர்தரப்பினர் கூறினர். அவ்வாறு செல்லும்போது முக்கியமாக அவர்கள் இடும் நிபந்தனைகளை நாம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியேற்படும். பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லுங்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேபோன்று கடந்த அரசாங்கம் பாரிய அளவில் வரி விலக்குகளை வழங்கியமையே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றும் எதிர்தரப்பினர் கூறுகின்றனர். அப்படியென்றால் வரிகளை அதிகரிக்க வேண்டும் என்பதை அவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.

அவ்வாறு வரி அதிகரிக்கப்படும் போதும் அதற்கு எதிராக கோஷங்களை எழுப்புகின்றனர். இவ்வாறு அவர்கள் இருவேறு முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

நட்டத்தில் இயங்கிவந்த பல்வேறு அரச நிறுவனங்கள் இலாபமீட்டும் நிலைக்கு வந்துள்ளமை, தற்போது நாம் முன்னெடுக்கும் பொருளாதார வேலத்திட்டங்கள் வெற்றியடைந்து வருவதை எடுத்துக்காட்டும் ஒரு விடயமாகக் குறிப்பிடலாம். மேலும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வட்டி வீதங்கள் குறைந்துள்ளன. அந்நியச் செலாவணிக் கையிருப்பு உயர்வடைந்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் தற்போது இல்லை. நாம் தற்போது பாரிய சவால்களை எதிர்கொண்டு அதில் இருந்து மீள்வதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.” என்றும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here