அஸ்வசும 2ம் கட்டத்துக்கு வறுமை மாத்திரமே இருக்க வேண்டும்

534

ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகவுள்ள அஸ்வசும வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு வறுமை ஒரே அளவுகோலாக இருக்கவேண்டும் எனவும், வறுமையை கணிப்பிடுவதற்கு குறைந்த அளவுகோல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அண்மையில் தெரிவித்தார்.

அஸ்வசும முதலக்கட்டம் தோல்வியடைவதற்கு எடுத்துக்கொள்ளப்பட அளவுருக்கள் அதிகமானதாக இருந்தமை மற்றும் அந்த அளவுருக்களுக்கு வழங்கப்பட்ட எடை காரணமாக இருந்ததாக குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

அஸ்வசும சமூக நலன்புரி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் கண்டறிவதற்கு நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு கூடிய போதே குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், வறுமையை அளவிடுவதற்கு மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மின்சார அலகுகள் 30க்கு குறைவான மின்சாரப்பாவனை எனும் அளவுருவை இதற்குப் பயன்படுத்த முடியும் என்றும், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து அந்த அளவுருவைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

நலன்புரி நன்மைகளை மூன்று மடங்கு அதிகரித்தாலும், அரசாங்கத்துக்கோ நலன்புரி நன்மைகள் சபைக்கோ மக்களின் வரவேற்பு இல்லாமைக்குக் காரணம் பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இடம்பெற்ற பலவீனங்கள் எனச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்குப் பொருத்தமான அளவுருக்கள், கல்வி கற்று வேலையில்லாமல் இருக்கும் 20% வீதத்துக்கும் அதிகமானவர்கள் உள்ள இலங்கைக்குப் பொருத்தமானது இல்லை என வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here