இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் கருத்துக்களை நாங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இது எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கருதுவதாகவும், இடைக்கால கிரிக்கெட் குழுவை நியமிக்க முடியாது என எவ்வாறு சம்மி சில்வாவால் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் எழுத முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(20) சபையில் கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் உள்ளிட்ட குழு செயற்பட்டதாக இதற்கு முன்னர் பொறுப்புடன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தாலும், இந்த அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் நவம்பர் 6, 7,9 ஆகிய திகதிகளில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஐ. சி. சி தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களை சபையில் சமர்பிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த கடிதங்களில் பல பாரதூரமான விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்த இடைக்கால குழு நியமனம் தவறான நடவடிக்கை என ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும்,1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33 ஷரத்துகளின் பிரகாரம், விளையாட்டுத் துறை அமைச்சருக்கு குறித்த அதிகாரங்கள் உள்ளன என்றும், இது இலங்கையின் சட்டம் என்றாலும், கிரிக்கெட் நிர்வாகம் இத்தகைய சட்டம் இல்லாதது போல் கடிதங்களை அனுப்ப முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்திற்கும், நிறைவேற்று அதிகாரத்துக்கும் மேலான சட்டமொன்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இல்லை என்றும்,1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வெற்றி கொள்ளும் போது இடைக்கால நிர்வாக குழுவொன்று காணப்பட்டதாகவும், அதன் தலைவராக ஆனா புஞ்சிஹேவா அவர்களே செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானிலும் இடைக்கால நிர்வாகக் குழுவொன்றே உள்ளதாகவும், தொன் ஆபிரிக்காவிலும் இடைக்கால நிர்வாக குழுவொன்றே உள்ளதாகவும், எனவே பாகிஸ்தானுக்கும் தென்னாபிரிக்காவுக்கும் ஒரு சட்டமும் இலங்கைக்கு வேறு ஒரு சட்டமும் இருக்க முடியாது என்றும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக சபையும் இலங்கையின் அரசியலமைப்பை கூட மீறியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சர்வதேச அமைப்பிடம் பொய் கூறி உயரிய அரசியலமைப்புச் சட்டமும் கூட இங்கு மீறப்பட்டுள்ளதாகவும், இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான கணக்காய்வு அறிக்கை, சித்ரசிறி அறிக்கை மற்றும் குசலா சரோஜனி அறிக்கைகள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இவ்வாறு எல்லோருக்கும் மேலாக செயற்படுவதற்கு பின்னால் மறைமுக சக்தியொன்று இருப்பதான சந்தேகம் எழுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
கடிதத்தைப் பார்த்தால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் மாத்திரமல்ல முழு நிறைவேற்று அதிகாரம் கொண்ட குழுவும் அரசியலமைப்பினை மீறியுள்ளதாகவும், இது தேச துரோக செயற்பாடாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சில நாட்களுக்கு கிரிக்கெட்டை தடை செய்து, அவர்களே தடையை மீறப் பெற்று சுப்பர் மேன் நாடகத்தை அரங்கேற்ற தயாராகவுள்ளனர் என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.