உலகிலேயே அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கையின் காட்டு யானைகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளதாக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், உயிரிழக்கும் யானைகளைப் பாதுகாப்பதற்கு வனவிலங்குகள் நிர்வாகத்தில் சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொரப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய, தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தில் மேலும் திருத்தப்பட வேண்டிய பிரிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சுற்றாடல் சட்டக் குழுவின் அழைப்பாளர் சாரக ஜயரத்ன உள்ளிட்ட குழுவினரால் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு முன்வைத்த பிரேரணைக்கு அமைய வனசீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
காட்டு யானைகளை பொதுச் சொத்துக்களாக மாற்றி அதன் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதற்குத் தேவையான சட்டரீதியான கட்டமைப்பை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டது.
அத்துடன், இந்நாட்டின் காட்டு யானைகள் அதிகமாக மரணிக்கும் ஒரு சந்தர்ப்பமான, சட்ட விரோதமான உயர் வலு கொண்ட மின்சார வேலிகளைப் பொருத்துவது தொடர்பில் குழுவில் கடுமையாகக் கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தில் தெளிவான வரைவிலக்கணம் இல்லை என்பதால் அது தொடர்பில் தெளிவான வரைவிலக்கணத்தை உட்படுத்தி, சம்பந்தப்பட்ட தண்டனையையும் உட்படுத்தி புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்துவது குறித்து குழுவில் கலந்துரையாடப்பட்டது.