தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 1700 ரூபா?

549

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் பிரகாரம் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் தமது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அது குறித்த எதிர்கால நடவடிக்கைகளுக்காக குழுக்களை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் குறித்து ஆலோசிக்க ஒரு குழுவை நியமிக்கவும், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இன்னுமொரு குழுவை நியமிக்கவும் இங்கு முன்மொழியப்பட்டது.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் தமக்கு வலுவான நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் பங்களிப்பு அவசியம் எனவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஆசிய நாடுகளின் சனத்தொகை அதிகரிப்புடன் உணவுத் தேவையும் அதிகரிக்கும் எனவும், அதற்காக இந்நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரம் தயாராக வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here