நாட்டை வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்ல அறிவு பூர்வமான மனித வளம் தேவை

431

பல்கலைக்கழகக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதற்கு அறிவாற்றல் மிக்க மனித வளம் தேவை என்று தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையில் பல்கலைக்கழகத் துறை மற்றும் தொழில் பயிற்சித் துறையின் மீது அந்த பொறுப்பு சார்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தொழிற்பயிற்சி கல்வித்துறையின் புதிய மாற்றத்திற்கு தனியார் துறையினரின் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டின் முழு கல்விமுறையையும் மறுசீரமைப்பதற்கு தேவையான சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

இந்நாட்டு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை இரண்டு அல்லது மூன்று மடங்கினால் அதிகரிக்க நாம் எதிர்பார்க்கிறோம். அதனால் புதிய தொழில்நுட்ப கல்வியுடன் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும்.

இலங்கையை பல்கலைக்கழங்களுக்கான கேந்திர நிலையமாக மாற்றியமைக்க வேண்டும். 2030 ஆம் ஆண்டளவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆங்கில அறிவை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். அதேபோல் ஏனைய மொழி அறிவிலும் தன்னிறைவான மாணவச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

அதனையடுத்து நாட்டின் கல்வித்திட்டத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த அவசியமான சட்டங்களை உருவாக்க எதிர்பார்ப்பதோடு, அதற்கமைய பல்கலைக்கழக கல்வி மற்றும் தொழில் பயிற்சிக் கல்வியை நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திகொள்ளும் வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம். நாட்டின் முன்னேற்றத்திற்கு அறிவு அவசியம். அதற்கான கல்வி முறைமையை உருவாக்க வேண்டும்.

தற்போது நாம் இடைநிலை வருமானம் ஈட்டும் நாடு. நாம் தொடர்ந்தும் இந்நிலையில் இருக்க வேண்டுமா? உயர் வருமானப் பொருளாதாரமாக மாற்றமடைய வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். நாம் அனைவரும் அந்த பயணத்தை தொடர வேண்டும். அதற்குரிய மனித வளத்தை கட்டமைப்பதற்கு தகுந்த கல்வியை வழங்க வேண்டும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here